ஊடக சுதந்திரத்திற்க்கு நோபல் விருது!



2021-ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு அறிவித்துள்ளது. 
1. Maria Ressa (பிலிப்பின்ஸ்) 
2. Dmitry Muratov (ரஸ்யா) 
ஆகியோருக்கு, ஊடக சுதந்திரத்திற்கு விருதுகள் நார்வேயின் தலைநகர் Oslo-வில் வழங்கப்படும். மற்ற நோபல் பரிசுகள் சுலிடனின் தலைநகர் Stockholm ல் வழங்கப்படும். 

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருதுக்கு பத்திரிகையாளர்கள் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1935-இல் ஜெர்மனியின் Nazi நிர்வாகம் முதலாவது உலகப்போருக்குப் பிறகு மீண்டும் தன்னை தயார்படுத்திக் கொள்வதை வெளிக்கொணர்ந்த Carl Von Ossietzky க்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு இப்போதுதான் மீண்டும் நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆதாரங்களின் அடிப்படையிலான ஊடக வெளிப்பாடுகள்தான் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பதற்கான அடிப்படை என்பதை பத்திரிகையாளர்கள் இருவருக்கு நோபல் விருது அறிவித்து அங்கீகரித்திருக்கிறது தேர்வுக் குழு. பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த Maria Ressa, ரஷிய பத்திரிகையாளர் Dmitry Muratov-வும் தங்கள் நாட்டு அரசுகளின் அடக்குமுறைகளையும் மீறி பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக போராடி வருவதை பாராட்டி அவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் அடைமழையாய் வந்து விழும் செய்திகளாலும் கருத்துகளாலும் பொதுமக்கள் திக்குமுக்காடுகின்றனர். ஒருவகையில் எந்தவிதக் கட்டுப்பாடோ கண்காணிப்போ இல்லாமல் செய்திகள் பொதுவெளியில் பரப்பப்படுவது கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு என்றாலும்கூட, பொய்ச் செய்திகளையும், கற்பனை பரப்புரைகளையும், துவேஷ சிந்தனைகளையும் அதன் மூலம் உலவவிட்டு குழப்பத்தை விளைவிக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில் நியாயமான, நேர்மையான முறையில் தகுந்த ஆதாரங்களுடனான செய்திகளை வெளியிடும் இரண்டு முக்கியமான பத்திரிகையாளர்கள் வெவ்வேறு நாடுகளில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதை எத்துணை பாராட்டினாலும் தகும். 

Maria Ressa சிறுவயதிலேயே தாயாருடன் அமெரிக்காவில் குடியேறியவர். CNN, The Wall Street Journal உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ஊடகங்களில் பணியாற்றிய அனுபவசாலி. 2012-இல் 'Rappler' என்கிற செய்தி வலைத்தளத்தை உருவாக்கிய 58 வயது Maria Ressaவின் கவனம் பிலிப்பின்ஸின் சர்வாதிகாரியாக இயங்கும் அதிபர் Rodrigo Duterte வின் அராஜக ஆட்சிக்கு எதிராக குரலெழுப்ப முற்பட்டது. அவருக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. அதிகார அடக்குமுறை கட்டவிழுத்து விடப்பட்டது. 

பிலிப்பின்ஸில் போதை மருந்து கடத்தல், விற்பனை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை என்கிற பெயரில் Rodrigo Duterteவின் அரசு நிகழ்த்திய படுகொலைகளைத் துப்புதுலக்கி வெளியிட முற்பட்டது 'Rappler' செய்தி நிறுவனம் அதிபர் Rodrigo Duterte நிகழ்த்திய படுகொலைகள் ஆதாரங்களுடன் பதிவிடப்பட்டன. அதன் எதிரொலியாக அவர் மீது கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசால் மான நஷ்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு பிணையில் இருக்கிறார் Maria Ressa. சமூக ஊடகங்கள் மூலம் Rodrigo Duterte அரசு தவறான தகவல்களை பரப்புவது குறித்தும், அரசை விமாசிப்பவர்களுக்கு எகிராக எவ்வாறு வன்மம் பரப்பப்படுகிறது என்பதையும், Maria Ressaவும் அவரது 'Rappler' செய்தி வலைதளமும் வெளியிட்டபோது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. 

ரஷியாவின் 'Novaya Gazeta' நாளிதழும் ஊடக சுதந்திரத்தை உயர்த்திப் பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. 1993 இல் தனது நண்பர்கள் சிலருடன் ரஷியாவின் நடுநிலை நாளிதழான Novaya Gazeta, 59 வயது Dmitry Muratov-ஆல் தொடங்கப்பட்டது. அதிபர் Vladimir Putin-ன் ஆட்சிக்கு எதிரான ஒரே நாளிதழ் என்கிற அளவில் துணிந்து செயல்படும் Novaya Gazeta ரஷிய அரசின் பல ஜனநாயக விரோத செயல்பாடுகளை துணிந்து வெளியிட முற்பட்டது. அந்த நாளிதழில் பணிபுரியும் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். Dmitry Muratovக்கு பல அச்சுறுத்தல்கள் அரசாலும், ஆளுங்கட்சியினராலும் விடப்பட்டும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது ஊடகக் கடமையை நிறைவேற்றி வருகிறது Novaya Gazeta. 

Vladimir Putin-ன் ஊழல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும், புதின் அரசு ஏவிவிடும் வன்முறை குறித்தும் துணிந்து வெளியிடும் ஒரே பத்திரிகையாக Novaya Gazeta, கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 'தூதுவரைக் கொல்லலாம். உண்மையைக் கொல்ல முடியாது' என்பதை தனது தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் 'Novaya Gazeta' சர்வதேச கவளத்தை ஈர்த்திருக்கிறது. 

ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் உண்மைகளால் மட்டுமே ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையை நிலைநிறுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் அதைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை ஊடகங்கள் வழங்க முடியும். அதைப் புரிந்து கொண்டு மாற்றுக்கருத்தை ஊக்குவிப்பதன் மூலம் தவறுகளைத் திருத்திக் கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற முடியும் என்கிற உண்மையை ஆட்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் மறந்து விடுகிறார்கள். 

இது புதிதொன்றுமல்ல என்றாலும், சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் உலகெங்கும் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும், ஆட்சியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதைக் கண்காணிப்பதிலும் ஊடகங்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதாக அமைகிறது Maria Ressaவுக்கும், Dmitry Muratovக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும் அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் விருது. 

- தினமணி (13.10.2021) 


முடிவுரை - ஆசிரியர்-ஜென் ஐ.ஏ.எஸ்.அகாடமி 

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் Rodrigo Duterte சர்ச்சைகளின் நாயகர். இவர் 'பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்கள் சுட்டுக் கொல்லபடுவர்' என்று பிரச்சாரம் செய்துதான் அதிபர் தேர்தல் வெற்றி பெற்றார். 

முதலில் மக்கள் இவரை ஆதரவளித்தாலும், அவருடைய அதிரடியான செயல்கள், பேச்சுகளால் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசியலமைப்பை மாற்றி அமைத்து, நிரத்தரமாக அதிபராக முயற்சி மேற்கொண்டதால், பிலிப்பைன்ஸ் பெரும்பான்மையான மக்கள் இவரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவருடைய சர்வாதிகாரத்தால் கொல்லப்பட்ட மனித உயிரிகள் அதிகம். அதனை முறையாக பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தவர்தான் அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள Maria Ressa என்ற பெண்மணி. 

வரும் 2022 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்றும், தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகப் போவதாகவும் அறிவுத்துள்ளார் அதிபர்Rodrigo Duterte. ஆனால், தனக்குப் பதிலாக தனது மகன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், குத்துச்சண்டை வீரருமான Manny Pacquiao அறிவித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஸ்யாவின் எதிர்கட்சித் தலைவர் Alexei Navalny க்கு விஷம் கொடுக்கப்பட்டது. சைபீரியாவின் Tomsk-ல் இருந்து மாஸ்கோவுக்கு செல்லும் விமான பயணத்தின் போது Navalny மயங்கி விழுந்தார். கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். தனக்கு நச்சு கொடுக்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் Putin தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதை ரஷ்ய அரசு கடுமையாக மறுத்தது. Alexei Navalnyக்கு விஷம் தரப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக ஜெர்மனி அரசு தகவல் தெரிவித்தது. Navalnyக்கு, ரஷ்ய பனிப்போர் காலத்தில் உருவாக்கிய 'Novichok' என்கிற விஷம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர். பத்திரிக்கையாளர் Dmitry Muratov அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாது, மக்களிடம் உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்றார். 

ரஷ்யாவின் அரசியலமைப்பை திறுத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு, அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்து, Putin 2036 வரை ரஷ்ய அதிபர் பதவியில் இருப்பார் என ரஷ்ய அரசு அறிவித்தது. அரசியலமைப்பின்படி அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது. 

பிலிப்பைன்ஸ் அதிபரின் அடக்குமுறையின் காரணமாக, அடுத்த முறை அதிபராகவும் வாய்ப்பு இல்லாமல் போனதும், ரஷ்யா அதிபரின் மறைமுக அடக்குமுறையும், தந்திரமாக அதிபர் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டதும் அரசியல் - வரலாற்று விநோதம்தான். கருத்து சுதந்திரம் இல்லாத வளர்ச்சி என்பது தீமைக்கு துணை போகும். 

இத்தகைய விநோதங்களில் உண்மையான பத்திரிக்கையாளர்கள் வெளியே கொண்டு வந்ததை, உலக அமைப்புகள் பாராட்டி இந்த அமைதிக்கான நோபல் பரிசை கொடுத்ததை நினைக்கயில் ஆச்சரியம் தான். 

வரலாற்றில், இந்தியாவின் Mother Teresa, மியான்மரின் Aung San Suu Kyi, வங்காளதேசத்தின் Muhammad Yunus ஆகியோர் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர். 
------------------------------------------------------------------------------
  • 2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் Kailash Satyarthi மற்றும் பாகிஸ்தானின் Malala Yousafzaiக்கு கூட்டாக நோபல் பரிசு கிடைத்தது. 
  • 2020-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு, உலக உணவுத் திட்டம் (World Food Programme-WFP) என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு பிரிவுக்கு கொடுக்கப்பட்டது. 
  • தென் கிழக்கு ஆசிய நாடாகவும், மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இறைமையுள்ள தீவு பிலிப்பைன்ஸ். Luzon, Visayas, மற்றும் Mindanao எனப் பொதுவாக மூன்று பிரதான புவியியற் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பகுதிதான் பிலிப்பைன்ஸ். உலகில் 12 ஆவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகவும் விளங்கின்றது. ’Reporters without Borders’ அமைப்பின் 2021 World Press Freedom Index-ன் படி மொத்தம் எடுத்துக்கொண்ட 180 நாடுகளில், Maria Ressa வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாடு 138வது இடத்திலும், Dmitry Muratov வசிக்கும் ரஷ்யா 150வது இடத்திலும் உள்ளது. 
  • நமது இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 142 வது இடத்தில் உள்ளது. 
  • நார்வே முதலிடத்தில் உள்ளது.