நூறுநாள் வேலைத் திட்டம் - ஒரு பார்வை!


ஏழை, எளிய மக்களின்  வாழ்வாதாரத்தை  உறுதிப்படுத்துவத்திற்க்காக உருவாக்கபட்ட "மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்' ஒரு சாபக் கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அண்மைக்காலமாக நிலவுகிறது. அதன் மேல் விவாதங்களும் வைக்கப்படுகின்றன. ஏழைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட திட்டங்களிலேயே முதன்மையான திட்டம் என்று இதனை உலக வங்கி பாராட்டியதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்தியா நடுத்தர வர்க்க நாடு அல்ல;  ஏழைகள் அதிகம் வாழும் நாடு. ஆகையால்தான் நம் பிரதமர் இந்தப் பேரிடர் காலத்தில் 80 கோடி மக்களுக்கு பொது விநியோக முறையில் உணவு தானியங்கள் வழங்கி உணவுப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் என்று ஐ.நா.சபையில் கூறினார்.

இன்று இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் நமக்கு புரிந்திருந்தால் இப்படிப்பட்ட விவாதம் வந்திருக்காது; இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் நடந்திருக்காது. இந்தத் திட்டம் வந்ததிலிருந்து, இந்தத் திட்டத்திற்கு எதிரான கருத்தை தொடர்ந்து பரப்பி வந்தது ஒரு கூட்டம். அது மெல்ல மெல்ல அரசியல் தளத்தில் பரவி, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியது. இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு புதிய அரசு வந்தவுடன் மூடுவிழா காணப்போகும் திட்டமாக இது சித்திரிக்கப்பட்டது.

ஆனால் நடந்தது வேறு. அந்தத்திட்டம் சீரமைக்கப்பட்டதே தவிர, நிறுத்தப்படவில்லை. உண்மை என்னவென்றால், இந்தத் திட்டம் பற்றி பொதுவெளியில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி அறிக்கைகள் அமைந்துவிட்டன. அவை, இந்தத் திட்டம் விவசாயத்தில், இதில் பணி செய்த பணியாளர்களின் வாழ்வாதாரத்தில், குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமையில், பெண்கள் மேம்பாட்டில், பொதுச்சொத்து உருவாக்குவதில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொணர்ந்துவிட்டன. இன்றைய மத்திய அரசாங்கம் இத்திட்டத்திற்காக ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 45,000 கோடியிலிருந்து 70,000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து விட்டு தேவையின் அடிப்படையில் மேலும் 40,000 கோடி ரூபாயை 2020-ஆம் ஆண்டு மாநிலங்களுக்குக் கொடுத்தது. அது மட்டுமல்ல, இந்தப் பேரிடர் காலத்தில் இத்திட்டத்தின் தேவையைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்வு இதழ்களில் வந்ததை பலர் வசதியாக மறந்து விட்டனர்.

இந்தப் பேரிடர் காலத்தில் விளிம்பு நிலை மக்களுக்கும், பெண்களுக்கும், தலித்துக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது இந்தத் திட்டம்தான் என்பதை ஆதாரத்துடன்  'Down to Earth' என்ற ஆங்கில ஆய்வு இதழ் கட்டுரையாக வெளியிட்டது.  இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு பொது சொத்துகள் உருவாகியுள்ளன என்பதையும் அவை எவ்வாறு விவசாயத்துக்கு உதவுகின்றன என்பதையும் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது. 

அதேபோல் தமிழ்நாட்டின் காந்திகிராம பல்கலைக்கழகமும் குஜராத்திலுள்ள 'IRMA' ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து பன்னிரண்டு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்தன. ஆய்வு முடிவில்,  பெண்களை அதிகாரப்படுத்துவதில், குடும்பத்தில் பெண்கள் முடிவெடுப்பதில், கிராம சபையில் பெண்கள் பங்கேற்பதில் இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட விளைவுகளை அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன.

அமெரிக்காவிலுள்ள Brown  பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்ரோ பாஸ்டர், இந்தத் திட்டத்தால் கிராமப்புற உள்ளாட்சியின் ஆளுகையில் நடந்த மாற்றங்களை தன் ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். இத்திட்டத்தால் வரவேற்கத்தக்க பல விளைவுகள் விளிம்புநிலை மக்களின் குடும்பங்களில் பெண்கள் மூலம் நடந்துள்ளன. இந்தத் திட்டம் வட மாநில மக்களுக்குத்தான் அதிக அளவில் பலனளித்திருக்க வேண்டும். அங்குதான் இந்தத் திட்டம் அதிகம் தேவைப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்களான கேரளமும் தமிழகமும் தான். நூறுநாள் வேலைத் திட்டம் என்பது வேலை தருவதும் பணம் தருவதும், பொதுச்சொத்தை உருவாக்குவதும் மட்டுமல்ல. இவற்றைத் தாண்டி பல உயரிய நோக்கங்கள் இந்தத் திட்டத்திற்கு இருக்கின்றன. அவற்றை நாம் புரிந்துகொண்டு மக்களிடமும் அந்தப் புரிதலை ஏற்படுத்திவிட்டால் உலகையே வியக்க வைக்கும் உன்னதத் திட்டமாக இந்தத் திட்டத்தை மாற்றிடலாம். இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு என்பதை சட்டத்தின் மூலம் உரிமையாக்கித் தந்துள்ளது. 

அடுத்து இத்திட்டத்தின் அடுத்த நோக்கம், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது. இந்தப் பணியின் மூலம் வாழ்வாதாரப் பாதுகாப்பு விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதிகாரப்பரவலுக்கு வலுசேர்க்க வேண்டும். பஞ்சாயத்து அமைப்புகள் இதன் மூலம் வலுப்பெற வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பு உறுதி செய்யப்படவேண்டும். திட்டமிடும் பணி மக்கள் பங்கேற்போடு நடத்திட வேண்டும். இந்தப் பணியாளர்கள் மூலம் கிராமசபை நடவடிக்கைகள் மேம்பட வேண்டும்.

அடுத்து, இத்திட்டத்தின் மூலம் தரமான பொது சொத்துகள் உருவாக்கப்பட்டு விவசாயத்திற்கு வலு சேர்க்க வேண்டும். நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட வேண்டும், வரத்துக் கால்வாய், போக்குக் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். மண்ணை வளப்படுத்துவது, நீர் ஆதாரத்தை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தோட்டக்கலை அபிவிருத்தி, நில மேம்பாட்டுச் செயல்பாடுகளை நடத்திட வேண்டும்.

நூறுநாள் வேலைத் திட்டத்தில் செலவழிக்கப்படும் மொத்த தொகையும் யாருக்கு நேரிடையாகச் செல்ல வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு, குறிப்பாக தலித்துக்கள், பெண்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்கள் கைகளுக்குச் செல்ல வேண்டும். அப்படிக் கிடைக்கின்றபோது அந்தப் பணம் அவர்களுக்குப் பல வழிகளில் பாதுகாப்பை வழங்கிடும்.

இவ்வளவு உன்னதமான அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம், இன்று வேலையே செய்யாமல் மரத்தடியில் உட்கார்ந்துவிட்டு பணம் வாங்கும் திட்டமாக சித்திரிக்கப்பட்டு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சோக நிகழ்வு. நம் பஞ்சாயத்து தலைவர்களும் அரசு அதிகாரிகளும் இதை ஏன் முழுப்புரிதலுடன் செயல்படுத்தவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. இதில் பல விதமான ஊழல்கள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு நிலையில் தமிழகம் இந்தத் திட்டத்தின் மூலம் பொது சொத்துகளை உருவாக்குவதில் சிரத்தையற்று இருந்தது. தற்போது அது மாறி வருகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் தமிழகத்தில் ஓரளவு சிறப்பாகச் செயல்படுவதாகத்தான் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் தவறுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த திட்டச் செயல்பாட்டின் மீதும் குறை கூறுவது சரியல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை ஆய்வு முடிவுக் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 30,143 கோடி ரூபாய் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக கிராமப்புறங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு கிராமப் பஞ்சாயத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் 2.4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன் சென்றிருக்கிறது. 

நூறுநாள் வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் குறைந்தபட்ச கூலி என்பது பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் சுதந்திர இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி என்பதும் கிராமங்களில் இத்திட்டத்தின் மூலமே கிடைத்தது. கேரள மாநிலத்தைப்போல இந்தத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் எடுத்துச் செல்ல தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்த முனைய வேண்டும். இந்தத் திட்டம் பற்றி சரியான முறையில் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

கிராமசபை உறுப்பினர்கள் திட்ட செயல்பாடுகள் பற்றி கிராமசபையில் கேள்வி கேட்க  வேண்டும். பஞ்சாயத்தைத் திட்டமிட வைக்க வேண்டும். அதுதான் நாம் ஏழை எளிய மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், பெண்களுக்கும் செய்யும் நல்ல பணியாகும். இத்திட்டத்தை கைவிட வைக்க முனைவது அடித்தட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

- தினமணி (13.10.2021)