பருவநிலை மாற்றங்களும் ஆரோக்கியக் கேடுகளும்

Climate Changes and Health Hazards

அக்டோபர் 31-லிருந்து  ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் 'ஐக்கிய

நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய உறுப்பு  நாடுகளின் 26-வது மாநாடு(United Nations Climate Change Conference) (CoP(Conference of the Parties)26) நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், உலக ஊடகங்களில் புவி  வெப்பமாதல் தொடர்பிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகளும் சூடுபிடித்துள்ளன. 1995 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், கார்பன் உமிழ்வைக்(Carbon Emission) குறைத்து புவி வெப்பமாதலைத் தடுக்கவும், பருவநிலை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

வருடா வருடம் புவி வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகும்; கடல் மட்டம் உயரும்; நகரங்கள் மூழ்கும்; பேரிடர்  பேரழிவு ஏற்படும் எனப் பூமிப் பந்துக்குப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. 

1880-1900 ஆண்டுகளில் நிலவிய சராசரி உலக வெப்பநிலை 14 degree celsius. இப்போது அது 15 degree celsius-ஆக இருக்கிறது. இதே நிலை நீடித்தால், 2100-ல் இன்றைய வெப்பநிலையிலிருந்து 3-5 degree வரை அதிகரிக்கும் என்றும், இந்த வெப்ப அதிகரிப்பை 1.5 degree-க்குக் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசுக்குழு (IPCC-Intergovernmental Panel on Climate Change) பரிந்துரைக்கிறது.

கார்பன் டையாக்ஸைடு(carbon dioxide), மீத்தேன்(methane), நைட்ரஸ் ஆக்ஸைடு(nitrous oxide),  ஓசோன் (ozone) போன்ற பசுங்குடில்  வாயுக்கள் (greenhouse gases) வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது பூமி சூடாகிறது.  இன்றைய மக்கள்தொகைப் பெருக்கம், நவீனத் தொழில்முறைகள், நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிசக்தி வாகனங்கள், அடர்வன அழிப்புகள், நவீன வாழ்க்கை முறைகள் எனப் பலவும் greenhouse gases-ன் அளவற்ற வெளியீட்டுக்குக் காரணமாகின்றன. இவற்றில் carbon dioxide-தான் வளிமண்டலத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், நீங்கள் அரை மணி நேரம் NetFlix வீடியோ பார்த்தால், 1.6 கிலோ carbon dioxide வெளியேறி, வளிமண்டலத்துக்குச் செல்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இப்படி greenhouse gases-ன் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் வெப்பமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது அது பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, காற்று, குடிநீர், உணவு, வசிப்பிடம்  என நம் வாழ்வாதாரங்களில்  அது கைவைக்கிறது. அப்போது ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகிறது. விலங்கினங்கள் புலம்பெயர்வதும் அழிவின் பாதைக்கு செல்வதும் நிகழ்கிறது. உணவு சுழற்சி(food cycle) சிதைகிறது.

பருவநிலை மாற்றத்தால் வெயில், குளிர் இரண்டுமே தீவிரமாகி, தட்பவெப்பம் தொடர்பான நோய்களை மட்டுமல்லாமல் இரத்தக்குழாய்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, இதய நோய்களையும் சுவாச நோய்களையும் கூட பல மடங்கு அதிகரித்துவிடுகின்றன. 2003-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெட்பத்தால் 70,000 பேர் வழக்கத்தைவிட அதிகமாக இறந்துள்ளதை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். அதிக வெப்பமுள்ள வளிமண்டலத்தில் மாசுகளும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் ஆஸ்துமா, சுவாசத்தடை உள்ளிட்ட பிரச்சினைகள் இரட்டிப்பாகும். அப்போது உலகில் 30 கோடி மக்களுக்கு ஆஸ்துமா புதிதாக உண்டாகும் என்கிறது புள்ளிவிவரம். பருவநிலை மாற்றத்தால் பல இடங்களில் மழையே பொழியாது அல்லது கடுமையாக மழை பொழியும். சமீபத்தில் கேரளத்திலும் உத்தராகண்டிலும் பொழிந்த கடுமையான மழையை இங்கு நினைவுகூறலாம். இதன் காரணமாகப் பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு பாதுகாப்பான குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வரும். வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்சினைகள் தலைதூக்கும். 

உலகில் பாதிக்கு மேற்பட்ட மக்கள்  கடலிலிருந்து 60 கி.மீ. தொலைவுக்குள்ளேயே வசிக்கின்றனர். கடலின் மட்டம் அதிகரிக்கும்போது அவர்கள் நகரங்களுக்குள் நகருவார்கள். அங்கு மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளும் சுகாதாரமும் குறைந்தபோகும். அப்போது டைபாய்டு, காசநோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்கள் அதிகரிக்கும். புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு வரும். அப்போது உணவும் தானியங்களின் உற்பத்தி குறைந்து, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு மனித இனத்தைத் தாக்கும். மனித உழைப்பு குறைந்து நாட்டின் உற்பத்தி குறையும்.

பருவநிலை மாற்றத்தால் பெருவெள்ளமும் புயல், சூறாவளிப் பேரிடர்களும் ஏற்படும்போது தெருக்களில் தண்ணீர் தேங்கும். அதனால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இன்னும் அதிகமாகப் பரவும். தற்போது நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் ஆயுட்காலம் 20-லிருந்து 40 நாட்களாக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று. 

புவிவெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் Ozone Layer சிதைந்துவிடுவதால், அதன் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் (Sun's ultraviolet radiation) ஊடுருவி நேரடியாக நம்மைத் தாக்கும்போது சருமப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. புவிவெப்பத் தாக்குதல்கள் கர்ப்பிணிகளையும் விட்டுவைப்பதில்லை. பிறவிக்குறை நோய்களுடனும்  குறைப் பிரசவங்களுடனும் குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கலாம்.என்பதால் நம் சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கின்றனர் சூழலியலர்கள்.

நம்மாலும் உதவ முடியும்!

பசுங்குடில் வாயுக்களை மிகுதியாக வெளிவிடும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவி அளித்தால் மட்டுமே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வாயுக்களைக் குறைப்பது சாத்தியப்படும். சைக்கிளை பயன்படுத்துவதும், இயன்றவரை  பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதும் சரியாக இருக்கும். புதைபடிவ எரிபொருள்(fossil fuels) சார்ந்த வாகனப் போக்குவரத்தைக் குறைக்கலாம். மின்வாகனங்களுக்கு மாறலாம். இறைச்சி  உணவைக் குறைக்கலாம். உணவும் தண்ணீரும் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம். வீடுகளில் மரம் வளர்க்கலாம். தோட்டம் போடலாம். வனவளர்ச்சிக்கு உதவலாம். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், போன்றவற்றில் மின்சாரப் பயன்பாட்டைக்  குறைத்துக்கொள்ளலாம். மின்னணு சாதனங்கள், ஞெகிழிப்(plastic) பயன்பாடு அதிகம் வேண்டாம். இப்படிச் சிறு சிறு விஷயங்களில் அக்கறை செலுத்தினாலே வியத்தகு பலன்களைக் காணலாம்.

www.who.int